ஆளுநர்களை மோசமாக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை

ஆளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நரேந்திரமோடி முதலமைச்சராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த “மோடி@20” என்ற ஆவண புத்தகம் மற்றும் அம்பேத்கார் மோடி சிந்தனைகள் என்ற இரண்டு நூல்களின் வெளியிட்டு விழா புதுச்சேரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர். தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பாரத பிரதமர் ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாக தான் இருக்கும். அம்பேத்கர்@ மோடி என்ற புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியிருக்கிறார். ஆனால் இதற்கு முகவுரை எழுதியதற்கு அவருக்கு வந்த விமர்சனங்களை பாருங்கள். இதுதான் நம் நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறேன். எனக்கு வேண்டியதை சொன்னால் கருத்துச் சுதந்திரம், எனக்கு ஒப்புக்கொள்ளாததை சொன்னால் கருத்துச் சுதந்திரம் கிடையாது. இளையராஜா இதற்கு முகவுரை எழுதிவிட்டார் என்பதற்காக அவருக்கு அத்தனை விமர்சனங்கள் செய்யப்பட்டது. இணையதளத்தில் விமர்சனம் செய்பவர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள். ஒரு கவர்னரை பார்த்து எழுதும்போது முட்டாள், நீ என்ன படிச்ச, உனக்கு அறிவு இல்லையா, புத்தி இல்லையா இப்படிதான் எழுதுகிறார்கள். நம் தமிழ் மொழி எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் மொழி. ஆனால் அந்த மொழியில் வித்தகர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இணையதளத்தில் எழுதும் வார்த்தைகள் பார்த்தால் பார்க்க முடியாது. அதனால் இந்த இணையத்தளத்தில் எதிராளி சகோதரர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். முதலில் புத்தகத்தை படியுங்கள், இது மாதிரியான சாதனை செய்த ஒரு பிரதமர் இருந்திருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒப்புக் கொள்ளவில்லை அதிலும் விமர்சனங்கள் செய்ய வேண்டுமென்றால் கொஞ்சம் நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள்.

இனிமேல் இணையதளத்தில் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கு பின்பு எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கைகள் இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை கூட இணையத்தில் பார்த்தேன் நீ என்ன படிச்சிருக்க, முட்டாளு என்று பேசும் அளவிற்கு எல்லாரும் இருக்கிறோம். எல்லோரும் அவரவர் தகுதி அடிப்படையில் தான் பொறுப்புக்களை வகித்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் மக்கள் நலனுக்காக தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.