அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழ்ந்து பேசியுள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அம்பேத்கர் மிகப்பெரிய பொருளாதார நிபுணராக விளங்கியுள்ளார், நீர்நிலை மேலாண்மையில் வல்லுநராக இருந்துள்ளார். அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி குஜராத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக செய்து இந்தியா முழுவதும் நீர்வழி போக்குவரத்திற்கு துறையை அமைச்சகத்தில் உருவாக்கியிருக்கிறார்.
அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அம்பேத்கர் பிறந்த இடம், இறந்த இடம், லண்டனில் படித்த வீடு, மும்பையில் வாழ்ந்த வீடு முன்பு அடையாளப்படுத்த படாமல் இருந்த நிலையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அம்பேத்கரை போற்றும்விதமாக இந்த இடங்களை புனித தளங்களாக அறிவித்து மேம்படுத்தியுள்ளார். அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தன்னுடைய புனித நூலாக ஏற்று அதன்படி ஆட்சியை நடத்தி வருகிறார். அரசியலமைப்பு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை கொண்ட நமது அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய அம்பேத்கரின் 66வது நினைவு தினத்தில், சென்னையில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்திற்கு பா.ஜ., மூத்த நிர்வாகிகள் உடன் இணைந்து மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினேன்’ எனக் கூறியுள்ளார்.