உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மதிக்கவில்லை: ஜகதீப் தங்கர்

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்குவதாக துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார். அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் கடந்த நவ.28ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது
நீதிபதி கவுல் கூறும்போது, ‘‘கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளில் ஒன்றிய அரசு ஏறி உட்கார்ந்துள்ளது. மேலும் கொலிஜியம் அமைப்பை அச்சுறுத்துகிறது. நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால், நாட்டில் நீதி அமைப்பு எவ்வாறு செயல்படும். பல பரிந்துரைகள் கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது. நீங்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டீர்கள். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் மரணமடைந்து விட்டார். எனவே நீதி அமைப்பின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் விளக்குங்கள். நீதிபதிகள் நியமனம் குறித்த பரிந்துகளில் இனியும் முடிவு எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என கடுமையாக கூறி, வழக்கை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கார், ‘‘புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission or NJAC) அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆணையத்தை கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டுவந்த ஆணையத்தை, உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்கு நாடாளுமன்றத்தில் எந்தவித கிசுகிசுக்களும் இல்லை. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறிவிட்டது. மக்களின் குரலாக நாடாளுமன்றம் ஒலிக்கிறது. அப்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. உலகத்தில் இதுவரை எங்கும் இதுபோல் நடந்ததில்லை’’ என்று அவர் கூறினார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜகதீப் பேசியதாவது:-

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது. மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.