நரிக்குறவர் என குறிப்பிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. திருத்த நோட்டீஸ்!

நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதாவில் ‘ர் ’ விகுதியோடு குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் திருத்த நோட்டீஸ் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967 ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன. மேலும், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் கடிதம் மூலமாக கடந்த 2013ஆம் ஆண்டே தெரிவித்திருந்தார். ஆனாலும், தமிழ்நாட்டில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் தொடர்ந்து தாமதமே ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒன்றிய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில், நரிக்குறவன், குருவிக்காரன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நரிக்குறவர் குருவிக்காரர் எனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருத்த தீர்மானம் நோட்டீஸை விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை கிடைக்க செய்வதற்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2006-2011) நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து பேசியதை நினைவு கூர்ந்த ரவிக்குமார் எம்.பி, “14 ஆண்டுகளுக்கு முன்பு நான் முன்வைத்த கோரிக்கை இன்று நிறைவேறுகிறது. அது நிறைவேறும் நேரத்தில் அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட திருத்த மசோதா நேற்று (டிசம்பர் 7 ஆம் தேதி ) இரவுதான் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டும் அவர், “அதன் வாசகங்களை நான் படித்துப் பார்த்து போது சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. ‘நரிக்குறவன் குருவிக்காரன்’ என்ற பெயர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு இணையதளத்துக்குச் சென்று சோதித்தேன். அதில் நரிக்குறவர் என்றுதான் ர் விகுதியோடு அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதே சாதியைப் பழகுடியினர் பட்டியலில் சேர்க்கும் போது அதை ன் விகுதி போட்டு ஏன் குறிப்பிட வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி., “எஸ்.சி/எஸ்.டி சாதிகளின் அட்டவணைகளில் இருக்கும் பெயர்கள் மட்டும் ‘ன்’ விகுதியோடு முடிவது நீண்ட காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் முன்னர் அப்படித்தான் சாதிப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் கலைஞர் ஆட்சியின் போது 50 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்கள் எல்லாம் ‘ர்’ என முடியும் விதத்தில் மரியாதையோடு மாற்றியமைக்கப்பட்டன. எஸ்சி/எஸ்டி பட்டியலை மாநில அரசு மாற்றியமைக்க முடியாது என்ற காரணத்தால் அது அப்படியே விடப்பட்டது. அவற்றை மாற்றும்படி அப்போதே ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றிப் பரிந்துரை செய்திருக்கலாம். இப்போது நரிக்குறவர் சாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சட்ட திருத்தம் செய்வது போல எல்லா சாதிகளின் பெயர்களையும் திருத்தி சட்ட திருத்தத்தை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் ஏனோ அது செய்யப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதிகள் ‘ன்’ என்ற விகுதியோடு முடிவதை மாற்றி ‘ர்’ என முடியும் படி திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். விசிக தலைவர் திருமாவளவனும் இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்து இருக்கின்றார். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

நாடாளுமன்றத்தில் 8 ஆம் தேதி அறிமுகம் படுத்தப்படும் சட்ட மசோதாவில் நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை நரிக்குறவர் குருவிக்காரர் எனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருத்த தீர்மானம் நோட்டீஸ் ஒன்றை நான் அளித்திருக்கிறேன். அதை ஏற்று அந்தப் பெயர்கள் திருத்தப்படும்.” என ரவிக்குமார் எம்.பி., நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விவாதத்துக்கு நாள் குறிக்கப்படும். அப்போது அதை உறுப்பினர்கள் வலியுறுத்தினால் நிச்சயம் அதை மாற்ற முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை ஆதரித்து வழி மொழியவேண்டும் எனவும் ரவிக்குமார் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்கள் ர் விகுதியோடு மாற்றப்பட்டதைப் போல எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களும் மாற்றப்பட தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.