கைதிகளை பரிமாறிக்கொண்ட அமெரிக்கா – ரஷ்யா!

அமெரிக்கா – ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்க கைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரும், ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டா் பூட்டும் தங்களது சொந்த நாடு திரும்பினா்.

ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக பிரிட்னி கிரைனா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அவரை மீட்டு அழைத்து வர அமெரிக்கா பெரும் முயற்சி மேற்கொண்டது. அதற்காக ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விக்டா் பூட்டை விடுதலை செய்து ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, பிரிட்னி கிரைனரை விடுவித்து அமெரிக்காவுக்கு அனுப்ப ரஷ்யா சம்மதித்தது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகர விமான நிலையத்தில் இரு கைதிகளும் நேற்று வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டு தத்தமது நாடுகளுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனா்.