முதல்வர் கான்வாய் வாகன படிக்கட்டில் நின்று பயணம் செய்த மேயர் பிரியா!

மாண்டஸ் புயல் காரணமாக காசிமேட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அப்போது மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாண்டஸ் புயல் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது. நேற்று முன்தினம் தீவிர புயலாக வலுப்பெற்ற போதிலும், இந்த புயல் மீண்டும் நேற்று காலை சாதாரண புயலாக வலுவிழந்தது. இன்று அதிகாலை இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையைக் கடைந்தது. நேற்றிரவு இந்தப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இருப்பினும், புயல் முழுவதுமாக கரையைக் கடந்த முடிக்க இன்று அதிகாலை வரை ஆனது. மாண்டஸ் புயல் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாகப் புயல் கரையைக் கடந்த விட்ட போதிலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் புயல் பாதிப்புகளைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. புயலால் காற்று காரணமாக சில பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். நேற்றைய தினமே புயல் கரையைக் கடக்கும் முன்பு, முதல்வர் ஸ்டாலின் அவசர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்திருந்தார். இதற்கிடையே இன்று காலை முதல்வர் ஸ்டாலின், புயல் பாதிப்புகள் குறித்து கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குச் சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார். மேலும், மீனவர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.

இதற்கிடையே முதல்வர் காசிமேட்டிற்கு காரில் சென்றபோது சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி முதல்வரின் காரில் தொங்கியபடி சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அமைச்சர்கள் காரில் இருந்த நிலையில், சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.