1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே, அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்றும், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இதுபற்றி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ன்பில் மகேஷ் பொய்யாமொழி, “1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம், தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் நடக்காத நிலையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட போதிலும், பாடங்களை முழுமையாக மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கடைசி வேலை நாள் வருகிற 13ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்று அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.