தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தால், மாண்டஸ் புயலால் பெரிய சேதங்கள் இல்லை. இதன்மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம் என்பதை தமிழக அரசு நிரூபித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
‘மாண்டஸ்’ புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த காற்றும், மழையும் வீசியதால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணிக்கு பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட விசை படகுகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 1000 பேருக்கு அரிசி, பெட்ஷீட், தலையணை, பாய், பால் பாக்கெட், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை நீண்டநேரம் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, துணை மேயர் மகேஷ் குமார், ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர், மண்டல் குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன் மற்றும் மருதுகணேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வடக்கு மண்டல இணை ஆணையர் அன்பு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் நான் சென்னைக்கு திரும்பினேன். திரும்பிய உடனேயே இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமுக்கு நேரடியாக சென்று புயல் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தேன். கலெக்டர்களிடம் காணொலி மூலமாக நேரடியாக பேசி விவரங்களை அறிந்து கொண்டேன். அதற்கு பிறகு, மகாபலிபுரத்தில் அந்த புயல் கடக்கிறது என்று சொல்லிய அந்த கலெக்டரோடு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான் தொடர்பு கொண்டு பேசினேன். மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக, சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை முதலில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், அதேபோல அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரவென்றும் பாராமல், பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர்கள் குறிப்பாக, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பல்வேறு அமைச்சர்களும், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டார்கள். நம்முடைய எம்பி, எம்எல்ஏக்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக்கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டது என்பது பாராட்டுக்குரியது. அதற்காக நான் முதலமைச்சர் என்கிற முறையிலும், அரசின் சார்பிலும் என்னுடைய வணக்கத்தை, நன்றியை, வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு சூழல் அமையும் என்று எதிர்பார்த்து முன்கூட்டியே அரசு சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த பணியை கண்காணிக்க வேண்டும் என்று அவர்களை நியமித்தோம். 5000 பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது கிட்டத்தட்ட 25,000 பணியாளர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டு, அந்த பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயலானது, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. இவ்வளவு அதிகமான மழை பெய்திருந்தாலும் பெருமளவு சேதம் ஏற்படாமல் இந்த அரசு தடுத்திருக்கிறது. கனமழை காரணமாக இதுவரை நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள்படி 4 உயிரிழப்புகளும், 98 கால்நடை இறப்புகளும் பதிவாகியிருக்கிறது. 181 வீடுகள், குடிசைகள் சேதமடைந்திருக்கிறது. 201 நிவாரண முகாம்களில், 3,163 குடும்பங்களை சார்ந்த 9,130 பேர்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை, மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 70 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, சுமார் 400 மரங்கள் விழுந்திருக்கிறது. 150 மரங்கள் தெரு விளக்குகள் மீது விழுந்து சாய்ந்திருக்கிறது. மேலும், சேதாரங்களை சரிசெய்ய இப்போது 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 900 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது, அதில் 300 மோட்டார்கள் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. 22 சுரங்க பாதைகளில் நீர் தேங்கவில்லை, அதனால் போக்குவரத்து எந்தவித தடையும் இல்லாமல் சீராக போய்க் கொண்டிருக்கிறது. வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, மின்கம்பங்களை சரிபடுத்துவது ஆகியவை உடனுக்குடன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாகன போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் துரிதமாக சீர்செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்கள், மின்கடத்திகள் சேதம் அடைந்திருக்கிறது. அதன் காரணமாக, மக்களுடைய பாதுகாப்பிற்காக 600 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 600 இடங்களில் துண்டிக்கப்பட்டிருந்தாலும், இப்போது வரைக்கும் 300 இடங்களில் அது சீர்செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளை சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சேத மதிப்பீடும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்த கணக்கெடுப்பெல்லாம் வந்தவுடன் விரைவாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால், எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த அரசு இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இந்த பணிக்கு முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய, இன்னமும் அந்த பணிகளை செய்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், குறிப்பாக நம்முடைய துப்புரவு பணியாளர்கள், அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை உங்கள் சார்பில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.