குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் குடும்ப மானத்தைவிட குழந்தைகளின் நலனே பெரிது. புகார் கொடுக்க பெற்றோர் முன்வருவதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ‘போக்சோ’ சட்டம். இந்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை உச்ச நீதிமன்றம் நடத்தி வருகிறது. இதன்படி, இரண்டு நாள் கருத்தரங்கம் புதுடெல்லியில் நேற்று துவங்கியது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:-
போக்சோ சட்டத்தில் பல மறைமுக பிரச்னைகள் உள்ளன. நம்முடைய குற்றவியல் நடைமுறைகள் தாமதமாவது போன்றவை ஒரு காரணமாகும். சில நேரங்களில் இந்த நடைமுறையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் வலியை, பிரச்னையை ஏற்படுத்துவதாக உள்ளது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் நீதித்துறையுடன் அரசு நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக உள்ள சட்டங்கள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நல்ல தொடுதல் எது, தீய தொடுதல் எது என்பது குறித்து இதுவரை கூறி வருகிறோம். இது, உளவியல் ரீதியில் குழப்பங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் புகார் தெரிவிக்க அஞ்சுகின்றனர். இதற்கு பதிலாக பாதுகாப்பான தொடுதல் எது, பாதுகாப்பற்ற தொடுதல் எது என்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதையெல்லாம்விட மிகப் பெரிய பிரச்னை, குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படும் என பெற்றோர் நினைப்பதே. குழந்தையின் நலனைவிட, குடும்பத்தின் மானம் பெரிதல்ல. தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பெற்றோரே மறைக்க முயல்வது, குழந்தையின் மனநலத்தை மேலும் பாதிக்கச் செய்யும். இதனால், புகார்கள் கொடுக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சில நேரங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர், அதே குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார். அவ்வாறு இருந்தாலும் புகார் கொடுக்க முன்வருவதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதுள்ள சட்டத்தின்படி,18 வயதுக்குட்பட்டோர் இந்த சட்டத்தின்கீழ் வருகின்றனர். அதே நேரத்தில், சுய ஒப்புதலுடன் பாலியல் உறவு நடந்திருந்தாலும், அதுவும் பலாத்காரமாகவே பார்க்கப்படுகிறது. இதில், எந்த வயதில் இருந்து சுய ஒப்புதல் இருந்தால் அதை குற்றமாக பார்க்கப்படாது என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
சில நேரங்களில் போலீஸ் அத்துமீறலும் இருப்பதால், பலர் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்க நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:-
இந்த சட்டத்தின் கீழ் தீர்வு காண்பதற்கு சராசரியாக, 100 நாட்களாகிறது. விரைவாக தீர்ப்பு அளிக்க, உள் கட்டமைப்பு ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் மற்றும் தொடர்புடையோர் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்கப்பட்டால், மூன்று பேர் விடுதலையாகின்றனர். மேலும், பெம்பாலான வழக்குகள் உடலுறவு தொடர்புடையதாக உள்ளது. இதனால் இந்த சட்டத்தை மேலும் கடுமையானதாக்க வேண்டும். இது தொடர்பாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.