புதினை தவிர்க்கும் மோடி

புதினை தவிர்க்கும் மோடி

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக வலுவான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா, சமீபமாக எண்ணெயும் வாங்குகிறது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த இந்தியா மீது அழுத்தம் இருந்தது. ஆனால், ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் இருந்து ஒதுங்கியே இருக்கும் இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படுவது குறித்து பேசியுள்ளது.

கடந்த வாரம், உலகின் ஏழு முக்கிய பொருளாதார பங்கு கொண்ட நாடுகள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கான விலை வரம்பை நிர்ணயித்தன. இந்த வரம்பு இந்த வார திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் உறுதியாக இருக்கும் இந்தியா, எங்கு குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்குமோ அங்கிருந்து வாங்குவோம் என்று கூறியது.

ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பார்போக் உடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியா தனது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

“ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தி தேவைகளுக்கு முன்னுரிமை அளித்துவிட்டு, ஆனால் இந்தியாவை அதைச் செய்யக்கூடாது என்று சொல்வது சரியல்ல” என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி வருடாந்திர சந்திப்பிற்காக இந்தாண்டு ரஷ்யா செல்லமாட்டார் என்ற தகவல் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பிற்காக கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த நிலையில், இந்தாண்டு பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யா செல்ல வேண்டும். ஆனால், இது குறித்து இரு நாடுகள் தரப்பிலும் தற்போது வரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரஷ்ய அதிபர் புதினைச் சந்திக்க இந்தாண்டு பிரதமர் நரேந்திர மோதி மாஸ்கோ செல்ல வாய்ப்பில்லை என ஏ.என்.ஐ மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைகள் கூறுகின்றன.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான வருடாந்திர சந்திப்பு இந்தாண்டு நடைபெற வாய்ப்பில்லை என செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து தற்போது வரை இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரோ அல்லது ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளரோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதின் – நரேந்திர மோதி சந்திப்பு இந்த ஆண்டு நடக்காது என்று இந்த வாரம் கூறியதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டிஏஎஸ்எஸ் முகமை வெளியிட்ட செய்திகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய பிரதமரை சந்திக்கும் திட்டம் எதுவும் விளாடிமிர் புதினுக்கு இல்லை என்று பெஸ்கோவ் கூறியிருந்தார்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக தனது செய்தியில் தெரிவித்துள்ளது லைவ் மின்ட். ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வது இந்தியப் பிரதமருக்கு உகந்ததாக இருக்காது என்றும் லைவ் மின்ட் தனது செய்தியில் கூறியுள்ளது.

ரஷ்ய அதிகாரி கூறியதைக் குறிப்பிட்டு, இந்த சந்திப்பு இந்த ஆண்டு நடைபெறாது என்று லைவ் மிண்ட் இணையதளம் கூறுகிறது. கடந்த செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) மாநாட்டில், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.

கடந்த செப்டம்பரில், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் 22ஆவது எஸ்சிஓ உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோதி புதினை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் போது புதினிடம், “இந்த சகாப்தம் போருக்கானது அல்ல. இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பலமுறை போனில் பேசியுள்ளோம். உணவு, எண்ணெய் மற்றும் உர நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும்” என பிரதமர் மோதி தெரிவித்தார்.

அதற்கு புதின், “யுக்ரேன் மற்றும் போர் குறித்த உங்கள் கவலை எங்களுக்கு தெரியும். விரைவில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் மோதி தொலைபேசியில் உரையாடினார்.

அக்டோபர் 4ஆம் தேதி நடந்த அந்த தொலைபேசி உரையாடலில், “ராணுவ நடவடிக்கை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது” என்று மோதி கூறியிருந்தார். மேலும், தேவை எழுந்தால் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் கூறியிருந்தார்.

2000ஆம் ஆண்டு இந்த சந்திப்புகள் தொடங்கியதில் இருந்து, இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்ளாதது இது இரண்டாவது முறையாகும்.

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்த சந்திப்பு, கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

இரு நாட்டு தலைவர்களின் 21ஆவது வருடாந்திர சந்திப்பிற்காக ரஷ்ய அதிபர் புதின் கடந்த ஆண்டு டிசம்பர் டெல்லி வந்தார்.

இந்தச் சந்திப்பில் மோதிக்கும் புதினுக்கும் இடையேயான உரையாடல் மூன்றரை மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டிஏஎஸ்எஸ் முகமை வெளியிட்ட செய்தி கூறுகிறது. இந்தச் சந்திப்பில் பொருளாதாரம், எரிசக்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், யுக்ரேன் – ரஷ்யா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றார்.

உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பல நாடுகள் விரும்புவதாக ஜெய்சங்கர் கூறினார்.

“போரின் பெருமளவு தாக்கம் வளரும் நாடுகளின் மீது இருப்பதால், பிரதமர் மோதி ஒரு விதத்தில் உலக நாடுகளின், குறிப்பாக வளரும் நாடுகளின் குரலாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்து இரு நாடுகளும் அமைதிப் பாதைக்கு திரும்ப இந்தியா முயற்சி எடுக்குமா என்று ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்ட போது, அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

“இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் சூழலைப் பொறுத்து நிறைய விஷயங்கள் இருக்கும்” என்று ஜெய்சங்கர் கூறினார்.

“அனைத்து நாடுகளும் தங்கள் கருத்தை சில நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளும். அந்த நாடுகளில் நாமும் உள்ளோம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்றும் அவர் கூறினார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்றது குறித்தும், அதிபர் புதின் அதில் கலந்து கொள்வது குறித்தும் பேசிய ஜெய்சங்கர், வேறுபாடுகள் நிறைந்த இன்றைய காலத்தில், அனைவரின் ஆதரவையும், நம்பிக்கையையும் தக்கவைப்பது எளிதல்ல என்று கூறினார்.

அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டிற்கு புதின் இந்தியா வருவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “எதிர்காலத்தில் நடப்பதை எதிர்காலத்தில் பார்ப்போம். அனைத்து தலைவர்களையும் ஒரே அறையில் வைத்திருப்பது பாலியிலும் கடினமாக இருந்தது. இந்தோனீசியாவின் தலைமை வெற்றியடையவதற்காக இந்தியாவும் வேறு சில நாடுகளும் அதற்கான வேலையில் ஈடுபட்டன.

எல்லா ஜி20 தலைவர்களும் ஒரே அறையில் அமர வேண்டும் என்பதுதான் அந்த மாநாட்டின் வெற்றிக்கான அளவுகோலாக இருந்தது. அதையும் நம்மால் செய்ய முடிந்தது. ஆனால் எந்த அளவிற்கு முடிந்தது என்பது வேறு விஷயம்” என்றார்.
நன்றி…பிபிசி