குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடந்த 1 மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில் பாஜக இந்த இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2017ல் இங்கு 99 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, இந்த முறை 156 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவரை சந்தித்தார். அதேபோல் வழியனுப்பவும் காத்திருந்து நின்றார். பின்னர் மறுநாளே அமித் ஷாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் சென்னை வந்தார். அந்த அளவிற்கு பாஜக தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நெருக்கமாக இருந்து வருகிறார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. கட்சியில் இரட்டை தலைமையா, ஒற்றை தலைமையா என்ற மோதல் உள்ளது. இதில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக முக்கிய முடிவு எடுக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவின் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி – ஓ பன்னீர்செல்வம் இருவரும் முனைப்பாக இருக்கிறார்கள். இதையடுத்துதான் இன்று குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ. பன்னீர்செல்வம் சென்று இருந்தார். பாஜக சார்பாக இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவே ஓ பன்னீர்செல்வம் விமானம் மூலம் குஜராத் சென்றார். இன்று குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மேடையில் இருந்துவிட்டு அதன்பின் கீழே இருந்த நிர்வாகிகளுக்கு வணக்கம் மட்டும் வைத்துவிட்டு சென்றனர். மற்றபடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மட்டும் கீழே இருந்த விருந்தினர்களை சந்தித்து பேசினார். இதில் ஓ பன்னீர்செல்வம் – நட்டா இருவரும் சந்தித்து 2-3 நிமிடங்கள் பேசிக்கொண்டனர். ஓ பன்னீர்செல்வத்தின் உடல் நலம் குறித்து நட்டா இதில் கேட்டறிந்தார். கையை குலுக்கி ஓ பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார். அப்போது எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் உடன் இருந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை ஓபிஆர் சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பின் ஓபிஆரை சந்தித்து ஜெ நட்டா நலம் விசாரித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லவில்லை. அவருக்கும் இதற்காக அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எடப்படியோ, நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட சில அப்பாயின்மென்டுகள் காரணமாக குஜராத் வர முடியாது என்று கூறி பூபேந்திர படேலுக்கு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பி உள்ளார். இரண்டு தலைவர்களும் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் இருவரையும் பாஜக அழைத்ததாக கூறப்படுகிறது. இதை விரும்பாத நிலையில் எடப்பாடி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேந்திர படேலுக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் குஜராத் முதல்-மந்திரிக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரலாற்றை படைத்துள்ள உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பதவி ஏற்பு விழா அழைப்பிதழை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆவலாக உள்ள போதிலும் 12-ந்தேதி (இன்று) ஏற்கனவே திட்டமிட்ட முக்கிய நிகழ்வுகள் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் குஜராத் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
