நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி, “இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதை மத்திய அரசு அறிந்திருக்கிறதா? இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக ரூ.83-ஆக சரிந்திருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. இந்திய ரூபாயை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

உலக அளவில் பணவீக்கம் நிலவி வருவதால் பெரும்பாலான நாடுகளின் செலாவணியின் மதிப்பு சரிந்து வருகிறது. ஆனால், நமது பொருளாதாரக் கொள்கைகளால் இந்திய செலாவணி மிக வலுவாக இருக்கிறது. பங்குச்சந்தையில் டாலர் – ரூபாய் இடையேயான மதிப்பில் அதிக அளவில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக அந்நிய செலாவணிகளை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் அதீத வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் இதை பார்த்து பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் சிலரோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இந்தியா இன்று சர்வதேச அளவில் 5-வது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்ராயன், “பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடனை ஏன் ரத்து செய்ய கூடாது?” என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறு. பெருநிறுவனங்களிடம் இருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு, அதை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது” என்றார்.