அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம் பூசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம் பூசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாளவன் கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக கூறி அவமதித்துள்ளனர். கும்பகோணத்தில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு காவி வண்ணம் பூசப்பட்டு, விபூதி, குங்குமம் இடப்பட்டு அவரை இந்து அமைப்பை சேர்ந்தவர் போல் சித்தரித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.
தலைவர்களை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகள் நம் நாட்டுக்கு புதிதல்ல. முதலில் திருவள்ளுவர், அடுத்தது பெரியார், இப்போது அம்பேத்கர். இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அம்பேத்கரின் புகைப்படத்தின் அருகே ‘காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டனத்துக்கு உரியவை. இதில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சண்யமின்றி கைது செய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில் எங்கள் போராட்டம் தீவிரமடையும். இவ்வாறு அவர் பேசினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.