ஆன்லைன் ரம்மி விளையாடுவதென்பது அறிவுப்பூர்வமான விளையாட்டு: சரத்குமார்

நான் சொன்னால் ஓட்டுக்கூட போடுவதில்லை, ரம்மி விளையாடுங்கள் என சொன்னால் மட்டும் விளையாடுகிறார்களா என நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களை ஒழித்திடவும் பூரண மதுவிலக்கை அமல்படத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே உண்ணாவிரதத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமாரும் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக உள்ளது. ஆரோக்கியம் இருந்தால் தான் சிறந்த குடிமகனாக வாழ முடியும். மனித வளம் உள்ள நாடு இந்தியா. மனித வளத்தை நாம் பேணி காக்க வேண்டும். மெரினாவில் கூட சமீபத்தில் போதையில் தான் ஒருவர் கழுத்தை அறுத்து நகையை திருடி உள்ளனர். இளைஞர் படை சீரழிந்து போனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். டாஸ்மாக் இல்லாமல் 36 ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு கிடைப்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் உள்ளது. ராஜாஜி ஆட்சி காலத்தில் எப்படி சென்னை மாகாணத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டதோ, அதனை பின்பற்றி தற்போதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிடலாம்.

தமிழகத்தில் கஞ்சா மிகப்பெரியளவில் புழக்கத்தில் உள்ளது. அதற்கான தனிப்படையை உருவாக்கி தடுத்து மிகப்பெரிய தண்டனை கொடுத்தால் மட்டுமே அதை குறைக்க முடியும். மதுவிலக்கு என்ற திமுக வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லை. டாஸ்மாக்கால் வரும் வருமானத்தை வேறு வகையில் ஈடு கட்டுவதற்கான நடவடிக்கையை முதலில் பெருக்க வேண்டும். இன்றைக்கு கல்யாணம் முதல் வேலை வரை அனைத்திலும் தற்போது குடி தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சரத்குமார் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் மட்டும் இல்லை. ஷாருக்கான், தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். ரம்மி விளையாடுவதென்பது அறிவுப்பூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட அறிவு வேண்டும். ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள். இதில் சரத்குமார் சொன்னால் மட்டும் எப்படி ரம்மி விளையாடுவார்கள்?

ஓட்டு போடுங்கள் என்றும் தான் நான் கேட்கிறேன். ஆனால் ஓட்டு போட மாட்டேங்கிறார்களே.. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்றும் தான் கேட்கிறேன். அதையும்தான் செய்வதில்லையே மக்கள். பின் ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்கனு எப்படி எடுத்துகொள்வது? தமிழக அரசு அவசர சட்டம் இயற்றிய பிறகு நான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரம் தற்போது ஒளிபரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.