ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது. ஆனால் அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார். இதையடுத்து திமுக கட்சி ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதலாக இது உருவெடுத்தது. அதோடு நீட்மசோதாவோடு சேர்த்து மேலும் 11 மசோதாக்கள் ஆளுநர்கள் முன் நிலுவையில் இருந்தது. இது தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மீண்டும் ஆளும் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மசோதா இந்த முறை ஆளுநர் சட்டப்படி மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. இதனால் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மோதல் மேலும் பெரிதானது. ஆளுநர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு எதிராக இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் மூலம் கருப்பு கொடியும் காட்டப்பட்டது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போவதாக கடந்த வாரம் செய்திகள் வந்தன. ஆளுநர் விரைவில் இதில் முடிவு எடுப்பார் என்று செய்திகள் வந்தன. அதன்படியே தற்போது ஆளுநர் இந்த நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார். இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி உள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பட்டது. நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.