450 மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்: கெஜ்ரிவால் அறிவிப்பு!

மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரும் தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்குவதே ஆம் ஆத்மி அரசின் நோக்கம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தரமான சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக உள்ளதால் சாமானிய மக்களால் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், அவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த திட்டம் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, டெல்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, சுகாதாரத் துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் டெல்லி மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.