உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, எதிர்பார்த்த ஒன்றுதான், அவருக்கு விரைவில் துணை முதல்வர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றதில், கலந்துகொண்ட சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், “மற்ற மொழிகளை கற்பதை ஒருபோதும் நான் எதிர்க்கவில்லை. மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு? இட ஒதுக்கீடு வேண்டும் என்றால், அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய சீமான், “உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் இது எதிர்பார்த்த ஒரு முடிவுதான். இன்னும் சொல்ல போனால் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” என்று சீமான் பதிலளித்தார்.