சொத்து குவிப்பு வழக்கில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், தாயார் எபனேசர், சகோதரர் ராஜா, ஜெகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த சமயம் பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 2003 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடிமாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திருநெல்வேலி- லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த டிஎஸ்பி பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இரண்டாவது என்.பெரியசாமி மனைவி எபினேசர், மூன்றாவதாக மகன் ராஜா, நான்காவதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஐந்தாவதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி கடந்த 2017ஆம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி அமைச்சர் கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கீதா ஜீவன் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குருமூர்த்தி இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பை முன்னிட்டு இன்று காலை அமைச்சர் கீதா ஜீவனின் தாயார் எபனேசர், சகோதரர் ராஜா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி குருமூர்த்தி வழக்கில் குற்றச்சாட்டு குறித்து எவ்வித ஆதாரமும் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஐந்து பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், தாயார் எபனேசர், சகோதரர் ராஜா, ஜெகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “18 ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்துள்ளது நீதி வென்றுள்ளது” என்று கூறியுள்ளார்.