எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள்!

எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்திய – சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இரு தரப்புக்கும் இடையே உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை அடுத்து, எல்லைப் பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே, அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்ட இந்தியப் படைகள், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தின. அப்போது, இந்திய – சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பு படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், இந்தியா – சீன படைகள் மோதல் குறித்து அறிந்தோம். எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

இதே போல், எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, அமெரிக்கா கருத்துத் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் கரின் ஜீன் பியரே கூறியதாவது:-

இந்திய – சீன எல்லையில் மோதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மோதலுக்கு பிறகு இரு தரப்பு வீரர்களும் அங்கிருந்து விலகி சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பல வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.