உலகிலேயே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. இதனிடையே, இந்தக் கூட்டத்தில் ஆரம்பம் முதலாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர், “சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் ஐ.நா. சபையில் பேசவே கூடாது” என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பிறகு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர், “இந்தியாவை விட தீவிரவாதத்தை சிறப்பாக கையாளும் நாடு வேறு எதுவும் கிடையாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹீனா ரப்பானி கூறியிருக்கிறாரே?” எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் இரண்டு ஆண்டுகளாக உலகம் பல விஷயங்களை மறந்து போய்விட்டது என்பது உண்மைதான். அதற்காக, உலகத்திலேயே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் திகழ்வதை யாரும் மறந்துவிடவில்லை. தெற்காசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் பாகிஸ்தானின் கை இருப்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதனால் இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் பாகிஸ்தான் மீதான ரத்தக்கறையை துடைத்துவிட முடியும் என தப்புக்கணக்கு போடாதீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்ற அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ஹிலாரி கிளிண்டன் கூறியது உங்களுக்கு (பாகிஸ்தான்) மறந்துவிட்டதா? “வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வளர்த்தால் அது பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும் கடிக்கும் என நினைக்க வேண்டாம். அந்த பாம்புகள், தங்களை வளர்த்தவர்களையும் ஒரு நாள் கடிக்கும் என்பதை பாகிஸ்தான் மறக்கக் கூடாது” என ஹிலாரி கிளிண்டன் கூறினார். அப்படி அவர் பேசும் போது, அவரது பக்கத்தில் இருந்தவர் ஹீனா ரப்பானிதான்.
இந்த உலகத்துக்கே பாகிஸ்தான் யார், அது என்னென்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். மற்ற நாடுகள் மீது பழிசுமத்துவதன் மூலம் பாகிஸ்தானை யாரும் நல்லவர்கள் என ஏற்க மாட்டார்கள். உங்களை நீங்கள் முதலில் சுத்தம் செய்யுங்கள். ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சி செய்யுங்கள். தீவிரவாதத்தில் இருந்து வெளியே வாருங்கள். சர்வதேச தளத்தில் தீவிரவாதம் குறித்து பேசிவிட்டு, பாகிஸ்தானால் எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.