24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்!

டெல்லியில் வருகிற 24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள், கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால் நான் எந்த திசையை நோக்கி பயணிக்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியும். என் பயணத்தை புரிந்துகொண்டாலே அது உங்களுக்கு தெரிந்துவிடும். அத்தியாவசிய பொருட்கள் உள்பட எந்த ஒரு பொருள்களின் விலையையும் உடனடியாக ஏற்றிவிடக்கூடாது. அது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மவுரியா நிருபர்களிடம் கூறுகையில், ‘ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லியில் வருகிற 24-ந் தேதி அவரது தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்’ என்றார்.

ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் பிரபலங்கள் பங்கேற்றுவரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.