புதுச்சேரியில் நிலவுவது அண்ணன்-தங்கை பிரச்சனைதான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும், இதனால், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் ஆதங்கத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் இது துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் புதுமையான ஆட்சி நடக்கிறது. ஆளுநருக்கும் முதல்வருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. முதல்வர் ரங்கசாமி மன உளைச்சலில் இருந்தால் அதை நேரடியாக பேசி தீர்த்துவைக்க தயாராக உள்ளேன். அண்ணன் ரங்கசாமி ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதைக் கேட்டு, பிரச்னை இருந்தால் அதை அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி தீர்த்து வைப்பேன். நாளை அதிகாரிகளையும், முதல்வரையும் அழைத்து அமர்ந்து பேசி காலதாமதத்தை சரி செய்து விடுவோம். இது ஒரு சகோதர சகோதரிக்குள் ஏற்படுகிற பிரச்னைதான். யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. முதல்வர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது தற்போதும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.