சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் படைத்தளபதி சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி நினைவு தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவருடைய புகழை போற்றி கோஷங்கள் போடப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் முத்துபாண்டியன், மானூர் ஒன்றிய செயலாளர் ஆதிப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் முத்து, நெல்லை பகுதி தலைவர் அய்யப்பன், செயலாளர் சங்கர், இணைச்செயலாளர் செல்வகுமார், பரமசிவ பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகர பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு சிலை அமைக்க வேண்டும். நெற்கட்டான்செவலில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு நிகழ்ச்சியாக அறிவிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் வெண்ணிக்காலாடியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அந்த படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவகுமார், தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை அமைப்பாளர் சத்யா, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் வெண்ணிக்காலாடியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.