தென்கொரியாவுடனான கூட்டு பயிற்சிக்காக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா போர் விமானங்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களால் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வரும் அமெரிக்கா, அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக வடகொரியாவுக்கும், அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சியை ஒரு படையெடுப்பு ஒத்திகையாக கருதும் வடகொரியா அதை கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்த சூழலில் ஒரு மாத இடைவெளிக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதித்ததாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை மறுத்த வடகொரியா உளவு செயற்கைக்கோளுக்கான மாதிரி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதித்ததாக கூறியது. எனினும் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இதுகுறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டு போர் பயிற்சிக்காக அமெரிக்கா அணு ஆயுத திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உள்பட டஜன் கணக்கான போர் விமானங்களை கொரியா தீபகற்பத்தில் குவித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கு பகுதியில் கொரிய தீபகற்பத்தையொட்டி அமைந்துள்ள ஜெஜூ தீவில் இருநாட்டு விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியதாகவும், இந்த வாரம் முழுவதும் பயிற்சி தொடரும் எனவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த போர் பயிற்சியில் அமெரிக்காவின் யு.எஸ். பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களும், எப்-22 ராக போர் விமானங்களும், தென்கொரியாவின் எப்-35 மற்றும் எப்-15 ரக விமானங்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் திடீரென கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சியை தொடங்கியிருப்பது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.