மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி!

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்குகிறது. அரசு மானியத்தை பெறும் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்க இம்மாத இறுதிவரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்தது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிலருக்கு மட்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எளிதாக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம். https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற பக்கத்தில் இதை எளிதாக மேற்கொள்ள முடியும். ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம். வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம். ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்காக நேரடி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இம்மாதம் 31ஆம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் தனது மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரனைக்கு வந்தபோது, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்பளித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.