பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கில் தமிழில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும்: வேல்முருகன்

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுந்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் அனைத்து கோயில்களில் குட முழுக்குகளில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக, தமிழ் மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு இருக்கிறது. ஆனால், கோயில் கருவறையில் தமிழில் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்ய அரசாணைகள் இருந்தும் கூட, அவை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. தற்போதைய திமுக அரசு தமிழ் அர்ச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஆனால் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் கருவறைக்குள் இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினால், இங்கு வழக்கமாக இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தமிழர் கடவுளான பழனி முருகன் திருக்கோயில் குட முழுக்கு வரும் 2023 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்க் கடவுள் முருகன் கோவிலின் குடமுழுக்கை முழுமையாக தமிழிலே மந்திரங்களை ஓதுவதே சிறப்பானதாகும். குறிப்பாக, யாகசாலை, கருவறை, விமானம் ஆகிய இடங்களில், குடமுழுக்கு தொடர்பான மந்திரங்கள் ஓதப்படும் போது, தமிழில் மந்திரங்களை நடத்துவதே, தமிழர்களின் குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனுக்கு பொருத்தமாகும். எனவே, பழனி முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 27.01.2023 அன்று நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது பக்தர்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் புகார் பெட்டி வைக்க வேண்டும். அந்தப் புகார்களை விசாரித்து, தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.