சீனாவில் கொரோனா தீவிரமடைந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை!

சீனா ‘பூஜ்ய கொரோனா’ கொள்கையை கைவிட்டதிலிருந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதோனோம் கூறியதாவது:-

சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், விரிவான கள நிலவரத்தை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்கள் தொடா்பான கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன. சீனாவின் நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது.

உலக அளவில் கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நிலையிலிருந்து கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் மேல் தற்போது குறைந்துள்ளபோதும், கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று தீா்மானம் செய்யமுடியாத வகையில் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது. சீனாவில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவலால், புதிய உருமாற்ற வகை தீநுண்மி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதோடு, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் கண்டுள்ள முன்னேற்றமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என சில விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா். இவ்வாறு அவர் தெரிவித்தாா்.

உலக சுகாதார அமைப்பின அவசர மருத்துவப் பிரிவு தலைவா் மருத்துவா் மைக்கேல் பையன் கூறுகையில், ‘ஒமைக்ரான் வகை பாதிப்பிலிருந்து மீள தடுப்பூசி மிக முக்கியப் பங்காற்றியது. ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்திய விகிதத்தில் சீனா மிகவும் பின்தங்கியிருப்பதோடு, சீனாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் 50 சதவீத அளவிலேயே இருந்தது. மக்கள்தொகை மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினா் அதிகமுள்ள சீனாவில், 50 சதவீத செயல்திறன் கொண்ட தடுப்பூசி போதுமானதல்ல. அண்மை வாரங்களில் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்திருப்பதாக பெயரளவில் சீனா கூறியுள்ளபோதிலும், போதுமான அளவில் செலுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவில்லாமல் உள்ளது’ என்றாா்.