சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா- ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் மனதை புண்படுத்தியதாக வன்னியர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. மேலும் உண்மைக் கதையான இந்த சம்பவத்தில் உண்மைக்கு மாறாக வேண்டுமென்றே சித்தரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் உண்மை சம்பவத்தில் லாக்அப்பில் வைத்து இருளர்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்னியர் இல்லை என்கிற போது வேண்டுமென்றே அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்த அந்த இன்ஸ்பெக்டர் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் பொதித்த காலண்டர் மாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு அச்சுறுத்ததல்கள் வந்தன. இதனால் அவரது வீட்டை சுற்றி போலீஸ் காவல் போடப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக வன்னிய சேனா எனும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ருத்திர வன்னிய சேனா நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயக்கர் அளித்த மனுவில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் படம் எடுத்துள்ளனர். தமிழ் பேசாத வடநாட்டு நபரை கன்னத்தில் அறையும் காட்சி மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. பச்சையம்மாள் என்ற பெயர் அந்த காலங்களில் வன்னியர்களுக்கு மட்டுமே வைக்கப்படும் நிலையில் அந்த பெயரை இருளர் சமூகத்தை சேர்ந்தவருக்கு பெயர் வைத்ததன் மூலம் எங்கள் சமூகத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தியது என்பன உள்ளிட்டவை அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.