இந்தியாவில் பரிதாபகரமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்!

பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் தினமான மே 3 ஆம் தேதி, எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஊடக சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. முதலிடத்தில் அதில் நார்வே முதலிடத்திலும் டென்மார்க் 2 வது இடத்திலும், ஸ்வீடன் 3 வது இடத்திலும் உள்ளன. ஈஸ்டோனியா 4 வது இடத்திலும் பின்லாந்து 5 வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன. இந்த பட்டியலில் கடைசி இடத்தை வட கொரியா தக்க வைத்து இருக்கிறது. எரிட்ரியா 179 வது இடத்திலும், ஈரான் 178 வது இடத்திலும் துர்க்மேனிஸ்தான் 117 வது இடத்திலும் உள்ளன. மியான்மர் 176 வது இடத்தில் இருப்பதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கும் பத்திரிகை சுதந்திர தரவரிசையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வல்லரசு நாடுகள் இந்த தர வரிசையில் வல்லரசு நாடுகளான பிரிட்டன் 24 வது இடத்திலும் பிரான்ஸ் 26 வது இடத்திலும் அமெரிக்கா 42 வது இடத்திலும் உள்ளன. உக்ரைன் மீதான போர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, இப்பட்டியலில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 180 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் சீனா 175 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இப்பட்டியலில் இந்தியாவின் நிலையும் மோசமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 133 வது இடத்தில் பின் தங்கி இருந்த இந்தியா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இந்த வரிசையில் 30 இடங்கள் முன்னேறி 76 வது இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் நிலை குறித்து எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்து தேசியவாதிகளால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். இந்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் பத்திரிகையாளர்களை சமூக வலைதளங்களிலும் நேரடியாகவும் இழிவுபடுத்தி மிரட்டப்படுகின்றனர். இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டு உள்ளது.