பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்து கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தரக்குறைவாக பேசியிருந்தார். இவரது பேச்சு இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சை கண்டித்து பல இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல பகுதிகளில் வன்முறைகளும் வெடித்தன. பின்னர், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பூதாகரமாக மாறியதை அடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்தே பாஜக நீக்கியது. பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியினரும், ஆதரவாளர்களுமே எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர், தனது பேஸ்புக்கில் நுபுர் சர்மா கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு ‘போஸ்ட்’ போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி அவரது கடைக்கு வந்த 2 பேர், திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து கன்னையா லாலை வெட்டினர். பின்னர், துடிக்க துடிக்க அவரது தலையை துண்டித்தனர். மேலும், இதை அப்படியே வீடியோவாகவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர். தொடர்ந்து, அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் கொலை செய்ய போவதாக அறிவித்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. முதலில் போலீஸார் பதிவு செய்த இந்த வழக்கு, பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் கொலையை அரங்கேற்றிய ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகிய 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் என்ஐஏ நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 9 பேரின் பெயர்களை அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அவர்களையும் கைது செய்தனர். அவர்களும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என என்ஐஏ தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். “நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கன்னையா லாலை இவர்கள் கொலை செய்துள்ளனர். கொலையில் 2 பேர்தான் ஈடுபட்டனர் என்ற போதிலும், அவர்களுக்கு உடந்தையாக 9 பேர் இருந்துள்ளனர். மக்கள் மனதில் பயத்தை விதைப்பதற்காக இந்த கொலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுக்க முழுக்க இது ஒரு தீவிரவாத தாக்குதல் ஆகும். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த சல்மான், அபு இப்ராகிம் ஆகியோரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலையை இவர்கள் செய்துள்ளனர்” என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.