சமத்துவ அரசியலை முன்னெடுத்தால் பாஜகவோடு கைகோர்க்க விசிக தயங்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாழும் சாதாரண மக்கள் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் தொடர்போ, கட்சிகளுடனான தொடர்போ இருக்காது. அவர்களுக்கு தெரிந்தது அமைதியான வாழ்க்கை மட்டும்தான்.அதுபோல் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாருடனும் பகை கொள்வதில்லை. எந்த கடவுள் உயர்ந்தது, என் மதம் உயர்ந்தது என்ற வாதம் அவர்களிடம் இருப்பதில்லை. மதங்களுக்கு இடையே இயக்கங்களாக இருக்க கூடிய ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் சமூக நல்லிணக்கணத்தை சீர்குலைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டவை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதிற்காக, ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்க்கிறார்கள். அதுதான் பிரச்சினை. அதனை தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசுகிறது.
மக்களின் உணர்வை பயன்படுத்தி, மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கிறவர்களை தான் விமர்சிக்கிறோம். ஆனால் பாஜகவை விமர்சிக்கும் போது, பாஜகவினர் இந்து மதங்களை விமர்சிப்பதாக மாற்றுகிறார்கள். விசிகவில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்துக்கள் தான். சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மை மக்கள். பாஜகவினர் பேசும் அரசியல் வெறுப்பு அரசியல் என்பதை அம்பலப்படுத்துகிறோம். ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகள் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் என ஏராளமான இயக்கங்கள் பல்வேறு பெயர்களில் இயங்குகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் பாஜக.
நாங்கள் மக்களின் விடுதலை குறித்த அரசியலை தான் பேசுகிறோம். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலை தான் விசிக பேசுகிறது. ஏன் இந்து மதத்தில் மற்ற மதத்தினர் இணையவில்லை? இதற்கு காரணம் சூத்திரன், வைசியன், சாதின் கலப்பு கூடாது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் தான் இந்து மதம் பரவாமல் இருப்பதற்கு காரணம். பாஜகவினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களின் அரசியலும், கொள்கைகளிலும் தான் முரண்பாடு. இவ்வாறு அவர் பேசினார்.