தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது!

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததற்கு பிறகு சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட கூட்டத்தொடர்கள் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
தற்போது தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா, கூட்டுறவு சங்க மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் சட்டசபை கூட்டத் தொடரை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருந்தன.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி ஒன்பதாம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம் போல இந்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும், காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும், இந்தாண்டின் கூட்டத்தொடர் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கூறினார்.

காலை 9:55 மணிக்கு ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் வரவேற்றபின் சபாநாயகர் இருக்கையில் அமரும் ஆளுநர் தனது உரையை தொடங்குவார். தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ரவி உரை நிகழ்த்த இருக்கிறார் .அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தவுடன் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.