ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். 100 நாட்களைக் கடந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தாண்டி டெல்லியில் நேற்று ராகுல் காந்தியின் யாத்திரை நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தியின் டெல்லி பேரணியில் திமுக எம்பி கனிமொழி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசனும் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை நான் என்னுடைய சகோதரராக ஏற்றுக்கொண்டேன். நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி, நான் காந்தியின் கொள்ளுப்பேரன். இதுவே எங்களிடையேயான உறவு என்றார் கமல்ஹாசன். மேலும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வருவோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி கவலை இல்லை என்றும் கமல்ஹாசன் பேசியிருந்தார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்துவதாக இது கருதப்பட்டது. இதனடிப்படையில் திமுக கூட்டணியில் மநீமவும் இணைந்தால் எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த யூக செய்திகளும் வெளியாகின. காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்துடன் அக்கட்சி பகிர்ந்து கொள்ள சாத்தியங்கள் இருக்கிறது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளதாவது:-

மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.