முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை இந்தியாவில் பரவ விடாமல் மலையை போல நின்று காத்தவர்தான் சீக்கிய குரு குருகோவிந்த் சிங் என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பஞ்சாபில் முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்த சீக்கிய குரு குருகோவிந்த் சிங் மற்றும் அவரது 4 மகன்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
முதலில் இன்றைய தலைமுறையினர் பலருக்கு குருகோவிந்த் சிங் என்பவர் யார் என்றே தெரியவில்லை. நமது நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்தவர்கள் குறித்து அவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும். முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் அராஜகத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தவர்தான் குருகோவிந்த் சிங். பாரத தேசத்தில் இருந்தவர்களை மதம் மாற்றும் நடவடிக்கை அவுரசங்கசிப்பின் ஆட்சிக்காலத்தில் தீவிரமாக நடைபெற்றது. மதம் மாறியவர்கள் உயிர் தப்பித்தார்கள். மறுத்தவர்கள், முகலாயர்களின் வாளுக்கு இரையானார்கள். அப்படிப்பட்ட பயங்கர அடக்குமுறை நடந்த சமயத்தில், அவுரங்கசிப்புக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்து காட்டியவர் குருகோவிந்த் சிங்.
அவுரங்கசிப்பின் பெயரை கேட்டாலே சிற்றரசர்கள் அஞ்சி ஒழியும் காலக்கட்டத்தில், அவரையே எதிர்க்க துணிந்தவர்தான் சீக்கிய வீரர் குருகோவிந்த் சிங். அவரை பணிய வைக்க அவுரங்கசிப் பல யுத்திகளை கையாண்டார். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. அவுரங்கசிப்பின் தீவிரவாதத்தை மலை போன நின்று தடுத்து நிறுத்தியவர்தான் குருகோவிந்த் சிங். அவருக்கு உறுதுணையாக அவரது 4 மகன்களும் இருந்தனர். கடைசி வரை, அவுரங்கசிப் படையின் மிரட்டலுக்கு அவர்கள் அஞ்சவில்லை. வாள் முனையில் குருகோவிந்த் சிங்கின் மகன்களை மதம் மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கடைசி மூச்சு உள்ளவரை எதிரிகளுக்கு அடிபணியவில்லை. அதேபோல், குருகோவிந்த் சிங்கும் அவுரங்கசிப்பின் படையினரை தீரத்துடன் எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் உடலில் இருக்கும் வரை சண்டையிட்டு இறந்தார். இந்த தீரம்தான் இந்தியா. ஆனால், நாம் நம் தலைமுறைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? ஆங்கிலேயர்கள் வந்தார்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.. முகலாயர்கள் வந்தார்கள் நம்மை ஆண்டார்கள் என்றுதானே சொல்லித் தருகிறோம். ஏன்.. நாம் அவர்களை அடித்து விரட்டிய வரலாறு எங்கும் இல்லை. இந்த வரலாறை பாஜக விரைவில் திருத்தும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.