பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்திய கடல் எல்லை பகுதிக்குள் அந்நிய நாட்டு படகுகள், கப்பல் மூலமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வபோது நடந்து வருகிறது. அதனை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி, கடத்தல்காரர்களை கைது செய்வதோடு, போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அந்த வகையில், நேற்று அதிகாலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்பு படை அளித்த தகவலின்படி சர்வதேச கடல் எல்லைக்கு அருகே துவாரகா பகுதிக்குள் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த மீன்படி படகு சந்தேகத்திற்கு உரிய வகையில் செல்வது கண்டறியப்பட்டு, துரத்தி சென்று காவல் படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‛பறிமுதல் செய்யப்பட்ட படகில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையும், குஜராத் பயங்கரவாத தடுப்பு படையும் இணைந்து இதுவரை 7வது முறையாக போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து கைப்பற்றியுள்ளன. அதன்படி, இதுவரை ரூ.1,930 கோடி மதிப்பிலான 346 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த 44 பேரும், ஈரானை சேர்ந்த 7 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.