கர்நாடகாவின் மைசூரு அருகே நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் பயணித்திருந்த நிலையில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பந்திப்பூரில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்வதற்காக பிரஹலாத் மோடி நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் காப்பகத்திற்கு மெரிசிடஸ் பென்ஸ் காரில் நேற்று குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளனர். திட்டமிட்டபடி பந்திப்பூரில் புலிகளை பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கார் மைசூரு-நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் மோதியுள்ளது. கார் வேகமாக மோதியதில் காரின் முன் சக்கரங்கள் தெரித்து சிதறியுள்ளன. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இவர்களை மீட்டு உடனடியாக எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து மைசூர் எஸ்பி சீமா லட்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல விபத்து நடந்த இடத்தையும் ஆய்வு செய்துள்ளார். விபத்தில் பிரஹலாத் மோடிக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல அவரது பேரனுக்கும், கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கர்நாடக அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் இவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு வர இருக்கிறார். இதனால் மருத்துவமனை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.