ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் விமான நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு தினமும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் மரணடைந்து வருகின்றனர். இருப்பினும் அதுபற்றிய விபரங்களை வெளியிடாமல் சீனா மறைத்து வருகிறது. சீனாவின் இந்த பாதிப்புக்கு அங்கு பரவும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான் காரணம். அங்கு மருத்துவமனைகளில் இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தகன மேடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியா அலர்ட்டாகி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகக்குறைந்த அளவில் தான் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஆலோசனைகள் நடத்தி பல்வேறு அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு பிறப்பித்துள்ளன. மேலும் மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு பணிகளை விரைந்து செய்து வருகின்றன. தற்போதைய சூழலில் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக ஆர்டிசிபிஆர் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு கூறியது. மேலும் பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறியுள்ளது. இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் சீனா, ஹாங்காங், பாங்காக் (தாய்லாந்து), ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி, மதுரை சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பயணிக்கும் பயணிகள் தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். அனைத்து பயணிகளும் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் விமானம் மட்டுமின்றி அதற்கான அனைத்து பயணங்களிலும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனிமை அவசியம் மேலும் பயணத்துக்கு பிறகு பயணிகள் தனிமைப்படுத்தி கொண்டு உடல்நலனை கண்காணித்து அருகே உள்ள சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய உதவிய எண் 1075க்கு அல்லது மாநில உதவி எண்ணை அறிந்து போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அவசியமில்லை. இருப்பினும் கூட அவர்களுக்கு அறிகுறி இருப்பின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விதிகளின் படி சிகிச்சை வழங்கப்படும்” என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது கேரளாவின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளின் பல இடங்களுக்கு விமானங்கள் இயங்கி வருகின்றன. இந்த விமான சேவை என்பது தென்இந்தியா மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. குறிப்பாக கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி, கர்நாடகாவில் மங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.