சுய கட்டுப்பாடுடன் மக்கள் முககவசம் அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதையொட்டி மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவருடன் விமானத்தில் பயணித்த மேலும் 70 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏதும் இல்லை. மக்கள் சுய பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். பொது மக்கள் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 70 பேருக்கும் சுகாதாரதுறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரையை அடுத்த விருதுநகரை சேர்ந்த தாய்-மகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதையொட்டி 2 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். புதியவகை கொரோனா தொற்று இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.