மாணவி பலி; மதுரையில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

மதுரை ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அண்டை மாநிலமான கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பிரேத பரிசோதனையில் ஷிகெல்லோசிஸ் என்றும் அழைக்கப்படும் ஷிகெல்லா பாக்ட்ரியாவே மாணவியின் மரணத்துக்கு காரணம் என தெரிய வந்தது. கெட்டுப்போன ஷவர்மா மூலம் இந்த தொற்று சிறுமியின் உடலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சுகாதாரத்தை பேணாமல் இயங்கி வரும் ஷவர்மா கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஷவர்மா கடைகளில் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 52 ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, 10 கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 கடைகளுக்கு நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்சரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்தில் உள்ள கடைகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையிலான அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சென்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஷவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கறியை அவர்கள் ஆய்வு செய்தனர். பழைய கோழி கறியை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி தரத்தை கண்டறிந்து வருகின்றனர். கடைகளில் பாதுகாப்பில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தி ஷவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் இயங்கும் கடையில் பழைய கோழி கறியை பயன்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் ஆய்வுக்காக அனுப்பி இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.