தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை பெற்றே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் என பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனர் பாஜகவினர். பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மேலிட தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுச் செல்கின்றனர். நேற்று கூட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கோவையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். மேலும், 23 அணி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொள்ளாமல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அ.தி.மு.க – பாஜக கட்சியினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும். அ.தி.மு.க எந்த வகையில் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் அது எடுபடாது. அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நமது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தி.மு.க தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.