சந்திரபாபு நாயுடு பேரணியில் நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்த எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தீவிர அரசியல் செய்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசால் தோற்கடிக்கப்பட்ட பின் ஆட்சியை மீண்டும் பெறுவதான் அவரது எண்ணமாக இருக்கிறது. எப்படியாவது ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, தலைநகர் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என அதிரடி காட்டி வருகிறார். மாநில பிரிவினையின் போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஏமாற்றி விட்டதாக பாஜக மீது குற்றம் சாட்டி வரும் அவர் ஆந்திராவை ஜெகன்மோகன் ரெட்டி சீரழித்து விட்டதாக கடுமையாக புகார் கூறி வருகிறார். மேலும் அடுத்த தேர்தலில் எப்படியேனும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனவும் தீவிரம் காட்டி வருகிறார். “ஜெகன் முடிவு..சேவ் ஆந்திர பிரதேஷ்” என்ற முழக்கத்துடன் மீண்டும் ஆந்திராவில் ஆட்சி அமைக்கும் விதமாக தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து வரும் அவர் தனது மகன் நாரா லோகேஷை வைத்து ஜெகன்மோகன் பாணியான நடை பயணத் திட்டத்தையும் தொடங்க திட்டமிட்டு இருந்தார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று நடைபெற்றுள்ள சம்பவம் அவருக்கு பலத்த அதிர்ச்சியையும் பின்னடைவையும் கொடுத்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் பாமூரு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சாலை பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென சந்திரபாபு நாயுடுவை கண்டவுடன் முண்டியடித்துக் கொண்டு அவர் அருகில் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய சிலர் அங்கு திறந்திருந்த கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி எட்டு பேர் உயிரிழந்தது அம்மாநில அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருக்கிறார். மேலும் சிகிச்சை பெற்று அவர்களுக்கு உரிய உதவிகளை செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.