கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 2006-ம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டது. இதன் அரசியல் கட்சியாக எஸ்டிபிஐ 2009-ல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையாளர்கள் ராமலிங்கம், சசிகுமார் உள்ளிட்டோர் படுகொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு தொடர்புள்ளது என்பது குற்றச்சாட்டு. இத்தகைய படுகொலைகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. பல்வேறு பயங்கரவாத செயல்கள், மதமோதல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 2-ம் நிலை தலைவர்களை குறிவைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று மொத்தம் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆழப்புழா, கோட்டயம், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. எர்ணாகுளத்தில் 8, ஆழப்புழா, மலப்புரத்தில் தலா 4 இடங்களிலும் திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. திருவனந்தபுரதிதில் நெடுமங்காடு, தொன்னக்கல், பல்லிசால் ஆகிய இடங்களிலும் கோழிக்கோட்டில் நடபுரத்திலும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. ஆழப்புழாவில் சிந்தூர், வந்தனம், வீயாபுரம், எர்ணாகுளத்தில் எடவநாடு, ஆலுவா ஆகிய இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பி.எப்.ஐ. முன்னாள் மாநில கமிட்டி உறுப்பினர் நிசார் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. அங்கிருந்து பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பையில் எடுத்துச் செல்லப்பட்டன. பி.எப்.ஐ. முன்னாள் தேசிய தலைவர் ஓமா சலாமின் சகோதரர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.