ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார்: சிஆர்பிஎப் விளக்கம்!

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர்தான் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார் என்றும் சிஆர்பிஎப் கூறியிருக்கிறது.

பாஜகவுக்கு எதிராகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் விதமாகவும் ராகுல் காந்தி ‘பாரத் ஜடோ யாத்திரையை’ தொடங்கினார். யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 12 மாநிலங்கள் வழியாக சுமார் 150 நாட்கள் பயணித்து காஷ்மீர் சென்றடைய திட்டமிட்டுள்ளது. தற்போதுவரை சுமார் 9 மாநிலங்கள் 46 மாவட்டங்கள் என மொத்தம் 3,000 கி.மீ தொலைவை யாத்திரை கடந்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை தனது 100வது நாளை நிறைவு செய்தது. இதனையடுத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 108வது நாளில் யாத்திரை டெல்லியில் நுழைந்தது. இதில் சுமார் 40 ஆயிரம் பேர் இவருடன் யாத்திரையில் பங்கேற்றனர். கூட்டம் அதிகம் இருந்ததாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான அளவு காவலர்கள் இல்லாததாலும் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக காவல்துறையினர் யாத்திரையின் போது ராகுல் காந்தியை சுற்றிலும் கயிறு கொண்டு பாதுகாப்பு அரணை உருவாக்குவார்கள். அதைத்தாண்டி ஆட்கள் வராதவாறு பாதுகாப்பார்கள். ஆனால் டெல்லியில் யாத்திரை நுழைந்தவுடன் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த தேவையான காவலர்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பலர் ராகுல் காந்தியை நெருங்க தொடங்கினர். இதனை தெரிந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் தாங்களாகவே ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “ராகுல் காந்தி Z+ பாதுகாப்பு பெற்றவர். ஆனால் யாத்திரை டெல்லியில் வந்த நிலையில் அங்கு அவருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. காவல்துறைக்கு பதிலாக எங்களது தொண்டர்களே பாதுகாப்பு அரணை உருவாக்கினார்கள். அதேபோல யாத்திரையில் பங்கேற்பவர்களிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணையும் செய்துள்ளது. ஹரியானாவின் புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக யாத்திரையில் நுழைந்திருக்கின்றனர். மட்டுமல்லாது யாத்திரையில் பங்கேற்றவர்கள் தங்கும் கண்டெய்னர்களிலும் நுழைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்கள் கடந்த 23ம் தேதி புகார் கொடுத்திருக்கிறோம். இந்த நாட்டுக்காக இரண்டு பிரதமர்களை கட்சி தியாகம் செய்திருக்கிறது. 2013ம் ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெற்ற நக்சல் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை இழப்புகளுக்கு மத்தியில் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி மீண்டும் பயணம் தொடங்க இருக்கிறது. இப்பயணம் மிகுந்த பதற்றமான மாநிலமான பஞ்சாப் மற்றும் ஜம்மு ஆகிய மாநிலங்களை கடந்து செல்கிறது எனவே ராகுல் காந்திக்கும், உடன் பயணிக்கும் கட்சியினருக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இக்கடிதத்திற்கு சிஆர்பிஎப் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், “ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு நடைபெற்றது பாதுகாப்பு குளறுபடி அல்ல. கடந்த 2020 ஆண்டு முதல் இவர் 113 முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். யாத்திரையின் போது அவர் பலமுறை இவ்வாறு விதிகளை மீறியுள்ளார்” என்று சிஆர்பிஎப் விளக்கமளித்துள்ளது.