நாட்டின் எல்லைகளை துணிச்சலும் தேசப்பற்றும் எச்சரிக்கையுடனும் எல்லைகளில் நிற்கும் வீரா்களால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) ‘பிரஹாரி’ கைப்பேசி செயலியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:-
எல்லைப் பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எப்) நாட்டின் மிகுந்த சிக்கல் நிறைந்த எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனா். மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் அறிமுகப்படுத்திய ‘ஒரு எல்லை ஒரு பாதுகாப்புப் படை’ திட்டத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடனான இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பிஎஸ்எப் வசம் வந்தது. இந்த எல்லைகளை தீவிர கண்காணிப்புடன் பிஎஸ்எப் வீரா்கள் பாதுகாத்து வருகின்றனா். எல்லைகளைப் பாதுகாப்பதில் எல்லைப்பகுதி கிராமத்தினரின் பங்கும் முக்கியமானது. எல்லைப் பகுதி கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்கின்றபோதுதான், எல்லைகளைப் பாதுகாக்க முடியும். எல்லைகளில் வீரா்களை நிறுத்தி வைப்பதோடு, எல்லையை ஒட்டிய கிராமங்களில் தேசப்பற்று மிக்க குடிமக்கள் வசிக்கின்றபோதுதான் நிரந்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். எனவே, எல்லை கிராமங்களில் மக்கள் வசிப்பதை எல்லைகளைப் பாதுகாக்கும் அனைத்து படைகளும் உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் 26,000 கிலோ போதைப் பொருள்களும், 2,500 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களும் பிஎஸ்எப் வீரா்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்லைகளில் பரீட்சாா்த்த முறையில் ஆளில்லா விமான எதிா்ப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டம் சிறந்த பலனை அளித்து வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் மேற்கு எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 22 ஆளில்லா விமானங்களை பிஎஸ்எப் வீரா்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனா். இதன் மூலமாக, ஆளில்லா விமானங்கள் மூலமாக ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்படும் ஆளில்லா விமானங்களின் தொடா்பைக் கண்டறியும் வகையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆளில்லா விமான தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக, வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வேலிகள் அமைக்க முடியாத பகுதிகளில் பிஎஸ்எப் சாா்பில் உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனா். நாட்டின் எல்லைகளை தூண்களாலும் வேலிகளாலும் மட்டும் பாதுகாக்க முடியாது. எல்லைகளில் உள்ள துணிச்சலும் தேசப்பற்றும் மிகுந்த வீரா்களால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அமித் ஷா கூறினாா்.