ஆதினங்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடனும்னு விதி இருக்கு!: சு வெங்கடேசன்

பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும் போன்ற சன்யாசி தர்மங்களை எல்லாம் நிஜமாகவே மடாதிபதிகள் பின்பற்றுகிறார்களா? என சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திரவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும் போன்ற சன்யாசி தர்மங்களை எல்லாம் நிஜமாகவே மடாதிபதிகள் பின்பற்றுகிறார்களா? என மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய சு. வெங்கடேசன், மடத்திற்கென பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆனால், மடத்தின் சம்பிரதாயங்களை விட மேலானது அரசியல் சாசன சட்டம். அதற்கு தங்களை மடாதிபதிகள் உட்படுத்திக் கொள்ள வேண்டும். சன்யாசி தர்மப்படி, நடந்து தான் செல்ல வேண்டும், பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும். அந்த சன்யாசி தர்மங்களை எல்லாம் நிஜமாகவே மடாதிபதிகள் பின்பற்றுகிறார்களா? காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தான் ஆக வேண்டும். மனிதரை மனிதர் சுமக்கும் அடிமைத்தன முறையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும். அதை தான் அரசு சொல்கிறது. அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை” என்றார்.