திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றது. முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், பால் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட அதிரடி திட்டங்களை நிறைவேற்றினார்.
இந்நிலையில் இன்றுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று, இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என, பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சமூக வலைதளம் வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:
வெற்றிகரமாக ஆட்சி பொறுப்பேற்று முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள உங்களுக்கும், உங்களது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது தலைமையின் கீழ், தமிழக மக்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என நம்புகிறேன். நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழகத்தை வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன். பொது சேவையில் உங்களது பணி சிறக்க நல்ல உடல் நலத்தை பேண வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.