பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு நடுநிலையாக இருப்பதுபோல் பாசாங்கு காட்டுகிறது. ஆனால், இந்த அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று சொல்ல நான் விரும்புகிறேன். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அனுசரணை காட்டுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது. பினராயி விஜயன் அரசு சில பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது கேரளாவில் பொதுவான மனநிலையாக இருந்து வருகிறது. பிரித்தாளும் சூழ்ச்சியே அதன் கொள்கை. பெரும்பான்மையான மக்கள் இந்த மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை மாற்றத்தை விரும்பவில்லை.

நமது மதத் தலைவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள், இந்த பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றனர். அவர்களின் சிக்கலை நம்மால் உணர முடிகிறது. அவர்களுக்கு இங்கு நடக்கும் போதைப் பொருள் ஜிஹாத் மீது கவலை இருக்கிறது. கேரளா அரசு சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

கேரள மாநிலத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் அரசியல் படுகொலைகள், ஒருங்கிணைந்த குற்ற சம்பவங்கள் இங்கு கொதிப்பான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் கொலைகளை செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடவும் மாநில அரசே உதவி வருகிறது. ஜனநாயக முறையிலும் கூட்டாட்சியின் அடிப்படையிலும் போராடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நாங்கள் நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.