தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளார்கள். குறிப்பாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு தேசிய அரசியல் தலைவர்களுக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் மாஜி முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று 70 வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு ராஜ்பவன் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆளுநரின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.