திமுக கூட்டணியை விட்டு வெளியேற திருமாவளவன் முடிவு: அண்ணாமலை

திமுக கூட்டணியை விட்டு வெளியேற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; இதற்காக பாஜக எதிர்ப்பு என்பதை முன்வைத்து நாடகமாடுகிறார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

நேற்று திருமாவளவன் ஒரு கூட்டம் போட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட துரைவைகோ, கே.பாலகிருஷ்ணன் என பலர் அதில் பங்கேற்றனர். இவர்கள் எல்லாம் மார்க்கெட்டில் விலை போகாத பொருட்கள். திருமாவளவனுக்கு திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்பது ஆசை. அதற்கு ஏன் கூட்டம் போட்டு பாஜகவை திட்டிவிட்டு வெளியே வருகிறீர்கள்? திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் வந்துவிட வேண்டியதுதானே. அதற்கு ஏன் பாஜகவை விமர்சிக்க வேண்டும். பாஜக என்பது இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கக் கூடிய இயக்கம். எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். எத்தனை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக் கூடிய இயக்கம்.

திருமாவளவனுக்கு கொஞ்சம் ஆசை.. துணை முதல்வராக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அதனால் முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணியைவிட்டு போய்விடுவேன்.. கூட்டணியைவிட்டு போய்விடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறிக் கொள்ளுங்கள். ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக பாஜகவை திட்டுகிறார் திருமாவளவன். ஏன் திருமாவளவன் இப்படி ஒரு டிராமா போடுகிறார்?

திருமாவளவன், திமுக கூட்டணியைவிட்டு வெளியே போக வேண்டும் என முடிவு செய்துவிட்டார். ஆனால் அவர் போகிற கூட்டணியில் யாரெல்லாம் இருக்கக் கூடாது என்கிறார். பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. சமூக நீதிக்கு எதிராக திமுக நடத்துகிறது எனில் திருமாவளவன் வெளியே வர வேண்டும். ஆனால் பாஜகவை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு அதைவைத்து ஏன் வெளியே வர வேண்டும்? எங்களை ஏன் திருமாவளவன் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.