எடப்பாடியை தொண்டர்கள் ஏற்கவில்லை: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். இதன்படி பல்வேறு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும் என்ற கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. அதனை முற்றிலும் மறுப்பதோடு, அந்தக் கருத்தையும் நிராகரிக்கிறேன். 1989ல் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்த பின் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெற்றது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலுசு கொடுத்தார்கள், பரிசு கொடுத்தார்கள், பணம் கொடுத்தார்கள், பாத்திரம் கொடுத்தார்கள் என்று மிக சாதாரணமாக சொல்லுகிறார்கள். 1996ல் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்காத பொருட்களே இல்லை. அப்படியும் அவர் தோல்வியடைந்தார். தற்போது திமுக தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இடைத்தேர்தலுக்காகவோ, தேர்தலுக்காகவோ உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல. இது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2019ம் நாடாளுமன்றத் தேர்தல், மாநகராட்சித் தேர்தல், பொதுத்தேர்தல் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது. தற்போது ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளோம். மக்கள் கொள்கை அடிப்படையிலான கூட்டணியை தான் பார்க்கிறார்கள். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று வெளிப்பட்டுவிட்டது. அதேபோல் இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை. ஜிகே வாசனுடன் பேசி வாங்கிக் கொண்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால், இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிட வைத்திருக்கலாம். ஆனால் கூட்டணி தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். அதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் மைனாரிட்டி ஜாதி என்ற பிரச்சாரமும் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசம் அதிகளவில் உள்ளது. இந்த வித்தியாசத்தை கண்டு நாங்கள் அதிர்ச்சியடையவில்லை. இதனை நாங்கள் எதிர்பார்த்தோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். இந்த இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம். தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சியையும் அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.